
ஹனோய், ஜூலை-21- வியட்நாமில் புயல் காற்றின் போது சுற்றுலா படகுக் கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் 28-டாக இருந்து சனிக்கிழமை அவ்வெண்ணிக்கை 38-டாக அதிகரித்த நிலையில், சரிபார்ப்புக்குப் பிறகு இப்புதிய எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், சம்பவத்தின் போது படகில் பயணித்தவர்களின் எண்ணிக்கையும், சரிபார்ப்புக்குப் பிறகு 53 பேரிலிருந்து 49 பேராக குறைக்கப்பட்டுள்ளது.
இன்னும் 4 பேரைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடி மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
படகு கவிழ்ந்ததில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வியட்நாமிய சுற்றுப்பயணிகள் ஆவர்.
இது, அண்மைய ஆண்டுகளில் வியட்நாமில் நிகழ்ந்த மிக மோசமான படகு விபத்தாகும்.
இதற்கு முன் 2011-ஆம் ஆண்டில் இதே Ha Long விரிகுடாவில் சுற்றுலா படகுக் கவிழ்ந்ததில், வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இவ்வேளையில், Wipha வெப்ப மண்டல சூறாவளி வட வியட்நாமை நெருங்கி வருவதாக ஆகக் கடைசித் தகவல்கள் தெரிவிக்கிறன.
அசம்பாவிதங்களையும் உயிர் சேதங்களையும் தவிர்க்க, கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.