
கோலாலம்பூர், செப்டம்பர் 21 –ஆறு மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தாமல், அறையையும் அசுத்தமாக வைத்திருந்த சக வாடகையாளர் மீது இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
Threads சமூக வலைத்தளத்தில் ‘icedchoclateee’ என்ற பயனர் பகிர்ந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தன்னுடன் தங்கியிருந்த பெண் வேலை இல்லாமல் இருந்தபோது, அவருக்கு உதவும் நோக்கில் மாதந்தோறும் RM350 வீதம் ஆறு மாதங்களுக்கு வாடகை செலுத்தியதாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.
எனினும், சம்பந்தப்பட்ட பெண் இம்மாதம் திடீரென மாயமானதுடன், WhatsApp குறுஞ்செய்திகளுக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதனால், அந்தப் பெண்ணின் அறையைச் சோதனையிட்டபோது, அங்கு சிறுநீர் நிரப்பப்பட்ட போத்தல்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டில் முறையாக இயங்கும் கழிப்பறை இருந்தும், சம்பந்தப்பட்ட பெண் ஏன் போத்தல்களிலும் பிளாஸ்டிக் பைகளிலும் சிறுநீர் கழித்தார் என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அறை முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசியதாகவும், தாம் செய்த உதவிக்குக் கிடைத்த பலன் இதுதானா எனவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறையின் புகைப்படங்களையும் அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இச்சம்பவம் இணையவாசிகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இச்சம்பவம் எங்கு நிகழ்ந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.



