
கோலாலம்பூர், மார்ச்-4 – தைப்பூசக் காவடியாட்டத்தை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட முன்னணி தனியார் மலாய் வானொலி நிலையமான ஏரா, இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்ட வேண்டும்.
அந்த ‘முட்டாள்தனமான’ மற்றும் ‘அவமதிப்பான’ வீடியோ மலேசிய இந்துக்களின் மனதைப் பெரிதும் காயப்படுத்தியுள்ளதாக, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சாடினார்.
இந்துக்களின் சமய நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை ஏளனம் செய்யும் இது போன்ற ‘மட்டகரமான’ செயல்களுக்கு நம் மலேசிய சமூகத்தில் இடமில்லை.
எது நகைச்சுவை எது உணர்ச்சிப்பூர்வமாக விஷயம் என்ற அடிப்படைக் கூடவா ஏரா வானொலி அறிவிப்பாளர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது என சரவணன் கேள்வியெழுப்பினார்.
முன்னணி வானொலி நிலையமாக இருந்துகொண்டு, பல்லின மக்களின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் ஏரா நடந்துகொண்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
ஊடகத் துறையில் பணியாற்றும் தகுதியை அவர்கள் இழந்து விட்டதையே இந்த கீழ்த்தரமான செயல் காட்டுவதாக, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் காட்டமாகக் கூறினார்.
எனவே, ஏரா வானொலி மீது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சிலை, சரவணன் கேட்டுக் கொண்டார்.
அதே சமயம் வானொலி நிர்வாகம் இந்துக்களிடமும் மலேசியர்களிடமும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்களும் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் சரவணன் கூறினார்.
இந்துக்கள், காவடியாட்டத்தின் போது உச்சரிக்கும் ‘வேல் வேல்’ என்ற சுலோகத்தை இழிவுப் படுத்தும் வகையில் ஏரா வானொலி அறிவிப்பாளர்கள் நடந்துகொண்ட வீடியோ முன்னதாக வைரலாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ஏரா வானொலி நிர்வாகம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும், இவ்விவகாரத்தை தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப் போவதாகவும் இந்து அமைப்புகள் தெரிவித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.