
புத்ராஜெயா, மார்ச்-6 – நாட்டின் முன்னணி மலாய் வானொலி நிலையமான ஏரா எஃ.எம்மின் ஒலிபரப்பு உரிமம் தற்காலிக ரத்து செய்யப்படும் விளைவை எதிர்நோக்கியுள்ளது.
அவ்வுரிமத்தை தற்காலிகமாக இரத்துச் செய்யும் நோக்க நோட்டீஸை, மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC ஏரா நிவாகத்திடம் ஒப்படைத்துள்ளதே அதற்குக் காரணம்.
உரிமத்தை ஏன் இரத்துச் செய்யக் கூடாது என, அந்த நோட்டீசுக்கு விளக்கமளிக்க ஏரா வானொலிக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிறகே எந்தவொரு முடிவும் எடுக்கப்படுமென, MCMC வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.
தைப்பூசக் காவடியாட்டத்தைக் குறிக்கும் ‘வேல் வேல்’ சுலோகத்தை இழிவுப்படுத்தி, ஏரா அறிவிப்பாளர்கள் நடனமாடி வீடியோ வெளியிட்ட சர்ச்சை தொடர்பில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்விவகாரம் தொடர்பில் ஆஸ்ட்ரோவின் உயர் நிர்வாகத்தினரை அழைத்து விசாரித்தும் உள்ள MCMC, 1998-ஆம் ஆண்டு தொடர்பு-பல்லூடகச் சட்டத்தின் 233-ஆவது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
விசாரணை அறிக்கை, மேல் நடவடிக்கைக்காக இன்று சட்டத் துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவிப்பாளர்கள் ‘வேல் வேல்’ என உச்சரித்து நடனமாடுவதும் பின்னர் பெரும் சிரிப்பலை எழுவதுமாக இருந்த அந்த வீடியோவுக்கு இந்துக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட 3 அறிவிப்பாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புக்கிட் அமான் போலீஸில் நேற்று அவர்களின் வாக்குமூலமும் பதிவுச் செய்யப்பட்டது.