ஹங் துவா LRT நிலையத்தில் மயங்கி தண்டவாளத்தில் விழுந்த பயணி பத்திரமாக மீட்பு

கோலாலம்பூர், ஜூலை-2 – கோலாலம்பூர் ஹங் துவா (Hang Tuah) LRT இரயில் நிலையத்தில் நேற்று மாலை, மயங்கி தண்டவாளத்தில் விழுந்த பயணி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாங் – ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் (Ampang-Sri Petaling Line) நேற்று மாலை சுமார் 6:35 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக RapidKL தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பயணி திடீரென மயக்கமடைந்து, நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்த வழித்தடத்திற்கான இரயில் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, தண்டவாளத்திற்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு, அந்தப் பயணியைப் பத்திரமாக மீட்டனர்.
அவருக்கு நிலையத்திலுள்ள அவசரச் சிகிச்சை அறையிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், தண்டவாளம் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு, மாலை 6:52 மணியளவில் இரயில் சேவைகள் மீண்டும் வழக்கம் போல் தொடங்கின.
பயணிகள் அனைவரும் எப்போதும் மஞ்சள் பாதுகாப்பு கோட்டுக்குப் பின்னால் நிற்குமாறும், உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக நிலைய ஊழியர்கள் அல்லது போலீஸாரின் உதவியை நாடுமாறும் RapidKL அறிவுறுத்தியுள்ளது.



