
கோலாலம்பூர், அக்-27-அகதிகள் பதிவு ஆவணத் திட்டமான DPP மூலம், நாடு முழுவதும் உள்ள அகதிகள் குறித்த தரவுகளை அரசாங்கம் திரட்டி வருகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பதிவு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டதாகத் துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
விரைவில் தொடங்கவுள்ள இரண்டாம் கட்டத்தில், தடுப்பு முகாம்களுக்கு வெளியே உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் (UNHCR) அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் பதிவு செய்யப்படுவார்கள். இந்தத் தரவுகள், அகதிகள் மூன்றாம் நாடுகளில் மறுகுடியேற்றம் செய்யப்படும் வரை அல்லது தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பும் வரை, அவர்கள் தற்காலிகத் தங்குவதை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் உதவும் என அவர் கூறினார்.
மலேசியாவில் செயல்படும் அனைத்துலக அமைப்புகள், குறிப்பாக UNHCR, அகதிகள் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறப்படுவது தொடர்பில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் Zahid அதனைக் குறிப்பிட்டார்.
எல்லை தாண்டிய பிரச்சினைகளைத் தனியாகச் சமாளிக்க முடியாத நாடுகளுக்கு, அனைத்துலக அமைப்புகள் ஒத்துழைப்பையும் நிபுணத்துவத்தையும் வழங்கும் முக்கியத் தளங்களாக விளங்குகின்றன. இத்தகைய ஒத்துழைப்பு மலேசியாவின் செயல்திறனை மேம்படுத்துவதுடன், மனிதாபிமானம் தொடர்பான விவகாரங்களை நிர்வகிப்பதில் அரசாங்கத்தின் சுமையையும் குறைக்க உதவுவதாக துணைப்பிரதமர் கூறினார்.
அகதிகளை மூன்றாம் நாடுகளில் மறுகுடியேற்றம் செய்வதற்கு UNHCR-இன் உதவி மலேசிய அரசாங்கத்திற்குத் தொடர்ந்து தேவைப்படுகிறது. அகதிகளின் அடையாளம் மற்றும் நிலையைச் சரிபார்ப்பதற்கு, மறுகுடியேற்ற நாடுகள் UNHCR வழங்கும் அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவதால், இந்த ஒத்துழைப்பு அவசியமாவதாக Zahid தெளிவுபடுத்தினார்.



