
சரவாக், ஸ்பாவோ, அக்டோபர் 27 – சரவாக், கம்போங் பூங்கின் (Kampung Bungin) பகுதியிலுள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில், மெத்தைக்கு அருகே கருநாகக் குட்டி மறைந்திருந்ததால் வீட்டில் இருந்தவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.05 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (APM) மூன்று அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
சுமார் ஐந்து நிமிடங்கள் தேடிய பிறகு, மெத்தைக்கு அருகே மறைந்திருந்த சுமார் மூன்று அடி நீளமுள்ள கருநாகக் குட்டியைக் கண்டுபிடித்தனர். அது Equatorial Spitting Cobra வகையைச் சேர்ந்த விஷப்பாம்பு என அடையாளம் காணப்பட்டது.
அதிகாரிகள் பாதுகாப்பாகப் பாம்பைப் பிடித்து, விஷப்பாம்புகளுக்கான சிறப்புப் பெட்டியில் அடைத்தனர். பின்னர், குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தொலைவில் உள்ள அதன் இயற்கையான வாழ்விடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.



