அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை மிதமான அளவில் நடத்துவீர் – அரசு உத்தரவு

கோலாலம்பூர், ஏப்-29-இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியபடி, அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகளும் மிதமான அளவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற தேசியப் பொருளாதார நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முன்னர் அளிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இந்த விவகாரம் எழுப்பப்பட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாமி பட்சில் தெரிவித்தார்.
பெரிய அளவிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது தொடர்பான தங்களது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சுகள், சட்டப்பூர்வ அமைப்புகள், அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த முதலீட்டு நிறுவனங்கள் (GLICs) போன்றவற்றிற்கு பிரதமர் ஆலோசனை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகள், பயிலரங்குகள் மற்றும் பெரிய அளவிலான செயல்பாடுகள் மிதமான அளவில் நடத்தப்பட வேண்டும் என அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.



