‘அதிகாரப் போட்டியை நிறுத்துங்கள்!’ — தற்போதைய, முன்னாள் மந்திரி பெசார்களுடனான சந்திப்புக்குப் பின் சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தல்

ஷா ஆலாம், அக்டோபர்-3,அரசியல் தலைவர்கள் தங்களுக்கு இடையேயான மோதல்களையும் அதிகாரப் போட்டிகளையும் உடனடியாகக் கைவிட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, மாநிலத்தின் தற்போதைய மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் முன்னாள் மந்திரி பெசார்களான டத்தோ ஸ்ரீ Dr மஹமட் கிர் தோயோ, டத்தோ ஸ்ரீ முஹமட் அஸ்மின் அலி ஆகியோரைச் சந்தித்த பின்னர் சுல்தான் இக்கருத்தை வெளியிட்டார்.
அரசியல் மோதல்கள் சமூகத்தில் பிளவுகளை மட்டுமே ஏற்படுத்தும் என எச்சரித்த அவர், நிர்வாக நிலைத்தன்மையும் நல்லிணக்கமுமே மாநில வளர்ச்சிக்கு முதன்மையானவை என சுட்டிக் காட்டினார்.
கருத்தியல் அல்லது கட்சி வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மக்கள் நலனுக்காக இணைந்து செயல்பட தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும், பிரச்சனைகளை முதிர்ச்சியான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும் சுல்தான் அறிவுறுத்தினார்.
சுயநல அரசியல் அல்லது கட்சி நலன்களை விட, ஏழை எளிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் மாநில வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்குமாறு அரசியல் தலைவர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.



