Latestமலேசியா

அனாக் கிராகட்டாவ் எரிமலைச் சாம்பல் பாதிப்பு தணிவு; ஜகார்த்தா விமான நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின

ஜகார்த்தா, செப்டம்பர்-8,இந்தோனேசியாவின் அனாக் கிராகட்டாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் எழுந்த அடர்ந்த சாம்பல் புகை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஜகார்த்தா அனைத்துலக விமான நிலையத்தின் சேவைகள் இன்று காலை முதல் மீண்டும் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன.

ஜகார்த்தாவிலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனாக் கிராகட்டாவ் எரிமலை கடந்த சனிக்கிழமை வெடித்துச் சிதறி, லாவா குழம்புகளையும் சாம்பல் புகையையும் வெளியிட்டது.

இதன் காரணமாக வான்வெளியில் பரவிய சாம்பல் புகையால் ஜகார்த்தாவின் Soekarno-Hatta மற்றும் Halim Perdanakusuma உட்பட 8 விமான நிலையங்களின் சேவைகள் வார இறுதியில் முற்றிலுமாக முடக்கப்பட்டன.

இதனால் சுமார் 3,000 விமானங்கள் பாதிக்கப்பட்டு, 340,000-க்கும் அதிகமான பயணிகள் விமான நிலையங்களில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தலைநகரைச் சுற்றியுள்ள 5 முக்கிய விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

எரிமலை சாம்பலின் வீரியம் குறைந்து வான்வெளி இயல்பு நிலைக்குத் திரும்பியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

​முன்னதாக, அனாக் கிராகட்டாவ் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சாம்பல் புகை காரணமாக மலேசியாவிலிருந்து ஜகார்த்தாவுக்குச் செல்லவிருந்த 41 விமானங்கள் உட்படப் பல அனைத்துலக விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டன.

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!