
அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கோவில்கள் மீதான நடவடிக்கைக்கு உத்தரவிட பிரதமருக்கு அதிகாரம் இல்லை – MIPP
கோலாலம்பூர், பிப்ரவரி-13,
சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட எந்தக் கோவில் அல்லது வழிபாட்டுத் தலம் மீதும் நடவடிக்க எடுக்கச் சொல்லும் சட்ட அதிகாரம் பிரதமருக்குக் கிடையாது என, மலேசிய இந்தியர் மக்கள் கட்சியான MIPP, நினைவூட்டலை வெளியிட்டுள்ளது.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாம் அட்டவணை படி, ஊராட்டசி விவகாரங்கள் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருகின்றன; புத்ராஜெயாவின் கீழ் அல்ல என, MIPP தலைவர் பி. புனிதன் குறிப்பிட்டார்.
நடப்பிலுள்ள ஊராட்சி சட்டங்கள் முறையான நடைமுறைகள், விண்ணப்பம், அறிவிப்பு, விசாரணை, நீதிமன்ற நடவடிக்கை ஆகியவற்றை கட்டாயப்படுத்துவதை அவர் சுட்டிக் காட்டினார்.
கோவில் என்பது வெறும் கட்டடம் அல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் 11-வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படும் சமய ஸ்தாபனமாகும்.
எனவே, அரசியல் உத்தரவால் அதன் மீது நடவடிக்க எடுக்க முயல்வது, சமய சுதந்திரத்தையும் சமூகத்தின் உரிமையையும் பாதிக்கும் என புனிதன் தெரிவித்தார்.
எந்தத் தலைவரும் அரசியலமைப்பை மீற முடியாது என்றார் அவர்.
மற்றவர் நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி மன்றங்களுக்கு டத்தோ ஸ்ரீ அன்வார் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
அதே சமயம் அதனை இன-மத மோதலாக்கி சட்டத்தை தங்கள் கைகளில் யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.



