Latestஇந்தியாமலேசியா

அன்வாரின் சென்னைப் பயணம் கைவிடப்பட்டது; விஜய் தரப்பின் முறையான பதில் இல்லாததால் மலேசிய தரப்பு அதிருப்தி

கோலாலம்பூர், செப்-9 -பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் திட்டமிடப்பட்டு தற்போது கைவிடப்பட்ட சென்னைப் பயணம் தொடர்பாக, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்திடமிருந்து இறுதிவரை முறையான பதில் கிடைக்காதது மலேசிய தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.

புதுடெல்லியில் நடைபெறும் BRICS பங்காளி நாடுகள் உச்சநிலை மாநாட்டிற்குப் பின்னர் தமிழ்நாட்டுக்குச் சென்று, முதல்வர் விஜய்யைச் சந்திக்க பிரதமர் அன்வார் திட்டமிட்டிருந்தார். இந்தத் தகவல் கடந்த மே மாதம் சென்னைக்குச் சென்ற தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் மூலம் விஜய் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரம் வணக்கம் மலேசியாவிடம் கூறியது.

செப்டம்பரில் தமிழ்நாட்டுக்குச் செல்லும் தமது விருப்பத்தை முதல்வராய் பதவியேற்ற விஜய்-க்கு மே மாதம் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்கூறிய போதே பிரதமர் அன்வாரும் தெரிவித்திருந்தார்.

அன்வாரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் இந்தியா–மலேசிய உறவு கொண்டாட்டம், வர்த்தக உரையாடல் மற்றும் Zoho, Tata, Apollo Hospitals உள்ளிட்ட முன்னணி நிறுவனத் தலைவர்களுடன் நேரடி வர்த்தக ஒத்துழைப்புச் சந்திப்புகளும் திட்டமிடப்பட்டிருந்தன.

கேரள ஆளுநராகவும் தமிழக ஆளுநர் பொறுப்பைக் கூடுதலாகவும் வகிக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னையில் பிரதமர் அன்வாருக்குத் தேநீர் விருந்துபசரிப்பு வழங்கவும் பின்னர் முதல்வரைச் சந்திக்கவும் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னைப் பயணம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, சில நிகழ்ச்சிகளும் வர்த்தகக் கலந்துரையாடல்களும் கேரளாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. ஆளுநர் அர்லேகர் அங்கு அன்வாரைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“பயணத் திட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கும் கோரிக்கைகளுக்கும் முதல்வர் விஜய்யின் அலுவலகத்திடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. மலேசியத் தரப்பு கடைசி நேரம்வரை நிச்சயமற்ற நிலையில் வைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது,” என அந்த வட்டாரம் தெரிவித்தது.

விஜய் லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்தால், அதனை முன்கூட்டியே அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கலாம் அல்லது பிரதமர் அன்வாரின் வருகைக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளை முன்மொழிந்திருக்கலாம் என்பதே மலேசியத் தரப்பின் கருத்தாக உள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்காக கோலாலம்பூரில் 80,000க்கும் மேற்பட்டோர் திரண்டது, மலேசியத் தமிழர்கள் அவர் மீது கொண்டுள்ள ஆதரவையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தியது. தமிழ்நாட்டுக்கு வெளியிலும் விஜய்யின் செல்வாக்கை வலுப்படுத்திய முக்கிய நிகழ்வாகவும் அது பார்க்கப்பட்டது.

இந்தப் பின்னணியில், அன்வாரின் வருகையை ஒரு சாதாரண மரியாதைச் சந்திப்பாக மட்டும் கருதாமல், மலேசியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, கல்வி, மருத்துவம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய வாய்ப்பாக விஜய் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக விஜய் செப்டம்பர் 10ஆம் தேதி லண்டனுக்குச் புறப்பட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கான முதலீடுகளையும் வர்த்தக வாய்ப்புகளையும் ஈர்ப்பதே அந்தப் பயணத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை கேள்வியெழுப்பவில்லை. ஆனால் தமிழர்களின் தொப்புள் கொடி உறவு கொண்ட ஒரு நாட்டின் பிரதமர் விஜய்யைச் சந்திப்பதற்காக அதே நோக்கங்களையும் உள்ளடக்கி அவரது மாநிலத்திற்கே வர விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அதனை இன்னும் முறையாகவும் ராஜதந்திர அணுகுமுறையுடனும் கையாண்டிருக்கலாம்,” என அந்த வட்டாரம் பெரும் ஏமாற்றம் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!