Latestமலேசியா

உண்மையின் பக்கம் துணிந்து நிற்போம் – அர்விந்த் கிருஷ்ணன்

மக்களின் வாழ்க்கை மற்றும் நாட்டின் பொருளாதாரப் பாதையைப் பாதிக்கும் முக்கிய விவகாரங்களில் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Akmal Saleh எடுத்துள்ள உறுதியான நிலைப்பாட்டை தேசிய மஇகா இளைஞர் பிரிவு தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.

குறிப்பாக, கிக் பொருளாதாரத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் வழங்குதல், வணிகங்களுக்கு அதிகமாக வசூலிக்கப்பட்ட வரியை விரைவாகத் திருப்பி வழங்குதல், பொருள், சேவை வரி GST தொடர்பான விவாதத்தை மீண்டும் தொடங்குவதற்கான துணிச்சல் ஆகியவற்றை அவர் சுட்டிக் காட்டினார்.

2026 அம்னோ இளைஞர் பேரவையில் கலந்து கொண்ட அவர், நாட்டின் வரி முறையை மேலும் வெளிப்படையானதாகவும், விரிவானதாகவும், நீடித்ததாகவும் மாற்றுவதற்கான ‘அடுத்தகட்டப் பாதை’ (the way forward) GST ஆக இருக்க முடியும் என ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

GST காரணமாக கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக தோல்வியைச் சந்தித்திருந்தாலும், அது தவறான கொள்கை என்று அர்த்தமல்ல. GST நடைமுறைக்கு முன் காணப்பட்ட குறைகளை சரி செய்து, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதுடன், அத்தியாவசியப் பொருட்களுக்கு பாதுகாப்பு தொடர வேண்டும் என்றும் அர்விந்த் வலியுறுத்தினார்.

அதேவேளை, வணிகங்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகப்படியான வரித் தொகை தாமதிக்கப்படக் கூடாது. அவ்வாறு தாமதமானால் வணிகங்களின் பணப்புழக்கம், செயல்பாடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படலாம். புதிய வேலை வாய்ப்பு சூழலில் கிக் பொருளாதாரத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நிலைமையையும் அரசாங்கம் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

யார் கொள்கையை அறிமுகப்படுத்தினார்கள் என்பதைவிட, அந்தக் கொள்கை நாட்டிற்கும் மக்களுக்கும் எவ்வளவு பயனளிக்கிறது என்பதையே அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும். நல்ல கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டும், குறைகள் உள்ளவற்றை மேம்படுத்த வேண்டும், பயனற்றவற்றை மாற்ற வேண்டும் என அர்விந்த் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!