
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 8 – அமைதிப் பேரணிச் சட்டம் 2012 அரசியலமைப்புக்கு முரண்பட்டது என்று கூட்டாட்சி நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, அரசாங்கம் அச்சட்டத்தை மறுபரிசீலனைச் செய்து வருகிறது.
மனித உரிமைகள், ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய தேவைகளை அடிப்படையாகக் கொண்டு சட்டத்தின் அனைத்து விதிகளும் விரிவாக ஆய்வு செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அமைதியான ஒன்றுகூடல் சுதந்திரம் என்பது கூட்டாட்சி அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமை என்றும் இதனை மதிப்பதோடு மட்டுமல்லாமல் பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் பிறரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் அரசாங்கத்தின் கவனத்தில் உள்ளது.
அமைதியான கூட்டத்தை நடத்துவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக காவல்துறைக்கு அறிவிக்கத் தவறுவதை குற்றமாக மாற்றுவது செல்லாது என்றும் அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் கடந்த ஜூலை 1 ஆம் தேதி அன்று கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் இந்தக் கருத்து, ஒன்றுகூடல் மற்றும் சங்கம் அமைக்கும் சுதந்திரத்தை மீறும் வகையில் தண்டனை விதிப்பதாகக் கூறப்பட்டது.
இந்த விடயம், மலேசியாவில் மக்கள் உரிமைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் தொடர்பான சட்டப்பூர்வ அணுகுமுறையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் முக்கியமான பரிசீலனைக்குரியதாக காணப்படுகிறது.