
கோலாலம்பூர், அக்- 21-நாட்டிலுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் Waze வழிகாட்டிச் செயலியைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற தேசிய இணைய பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது.
அனைத்து அமைச்சுகள், துறைகள், சம்பந்தபட்ட நிறுவனங்கள் ஆகியவை அந்த உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் Tan Sri Shamsul Azri வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட Waze செயலியின் பயன்பாட்டால் பயனர்களின் நடமாட்டத் தரவுகள் மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பாக ஏற்படக்கூடிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLMமின் உள்நாட்டு வழிகாட்டிச் செயலியான TuJu-ஐப் பயன்படுத்துமாறு பிரதமர் பொதுமக்களை ஊக்குவித்துள்ளார்.
அந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விகளையும் விளக்கங்களையும் பிரதமர் துறையின் கீழுள்ள தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனத்திடம் (NACSA) சமர்ப்பிக்கலாம் என Shamsul Azri குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பு, தகவல் நம்பகத்தன்மை மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதே அந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
இதனிடையே, தேசிய இணைய பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில், இணைய பாதுகாப்புச் சட்டம் 2024, MyDigital ID பாதுகாப்பு, கணினி அச்சுறுத்தல்கள், சுய இயக்க செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் தேசிய முக்கியமான தகவல் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.



