
கோலாலம்பூர், அக்- 21-கோலாலம்பூர், Kepong, Jalan Metro Perdana Barat 8 பகுதியில் உரிமமின்றி செயல்பட்ட பொழுதுபோக்கு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், விருந்தினர்களை உபசரிக்கும் பணியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 76 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூர் காவல்துறையின் ‘Op Noda’ நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் 19 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். கைதான 77 பேரில் உள்ளூர் ஆடவரும் ஒருவர் என கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் Datuk Fadil Marsus தெரிவித்தார். அம்மையம் உரிய உரிமம் அல்லது அனுமதியின்றி இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
சோதனையின்போது இரு ஒலிபெருக்கிகள், ஒரு மைக்ரோஃபோன், deejay கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் வணிக ரசீதுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, காவலில் வைப்பதற்கான உத்தரவு பெறப்பட்டது.
உரிய அனுமதியின்றி பொழுதுபோக்கு நடவடிக்கைகளை நடத்தியதற்காக 1992ஆம் ஆண்டு பொழுதுபோக்குச் சட்டத்தின் கீழும், குடிநுழைவு விதிமீறல்கள் தொடர்பாக குடிநுழைவுச் சட்டம் மற்றும் குடிநுழைவு ஒழுங்குமுறைகளின் கீழும் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று Fadil தெரிவித்தார். குற்றச்செயல்கள் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் கோலாலம்பூர் காவல்துறையின் 03-2115 9999 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலோ தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



