குவாந்தான், செப்டம்பர் -6, பஹாங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கும்பலாக ஆடவரைத் தாக்கியதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்குமாறு, பட்டத்து இளவரசர் தெங்கு ஹாசானால் போலீசை உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை விரைவாக, நியாயமாக, வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
Alias Awang என்ற ஆடவருக்கு காயம் ஏற்படும் அளவுக்கு, கூர்மையான ஆயுதத்தாலும் கைத்துப்பாக்கியாலும் அவர் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வைரலாகியுள்ளது.
அதனைத் தாம் கடுமையாகக் கருதுவதாக தெங்கு ஹாசானால் சொன்னார்.
தவறிழைத்தது கண்டறியப்பட்டால், அது யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
தாமோ அரண்மனையோ யாரையும் பாதுகாக்க மாட்டோம் என பட்டத்து இளவரசர் திட்டவட்டமாகக் கூறினார்.
கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் தொழிலாளியான ஓர் ஆடவர், பஹாங் அரண்மனையைச் சேர்ந்தவர் உள்ளிட்ட கும்பலால் தாக்கப்பட்டதாக இணையச் செய்தி ஊடகமொன்று முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
கடுமையாகத் தாக்கப்பட்டதில் அவ்வாடவருக்குத் தையல் போடும் அளவுக்கு தொடை கிழிந்து, காலிலும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.