
கோலாலம்பூர், அக்டோபர் 29 – இத்தாலியின் பிசா (Pisa) நகரில் உணவருந்துவதற்காகக் காரை நிறுத்தியிருந்த மலேசியக் குடும்பத்தினரின் 11 பயணப் பைகள் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசாவிலிருந்து மிலான் (Milan) நோக்கிப் பயணித்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நண்பர் Threads சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். திருடப்பட்ட பைகளில் இருந்த ஐபேட் (iPad) சாதனத்தின் இருப்பிடத்தைக் கண்காணித்தபோது, அது ரோமா மக்கள் வசிக்கும் முகாமாக இருக்கலாம் எனக் கருதப்படும் பகுதியைக் காட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் அளித்த பதில் எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும் குடும்பத்தினர் ஏமாற்றமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வாகனங்களில் பயணப் பைகளை விட்டுச் செல்ல வேண்டாம் என இணையவாசிகள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்குமிடத்திற்குப் பைகளை முதலில் கொண்டு சேர்த்துவிட்டு சுற்றிப் பார்க்கச் செல்லுமாறும், தேவையற்ற இடங்களில் வாகனத்தை நிறுத்துவதைத் தவிர்க்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



