Latestமலேசியா

விபத்தால் 8 ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக உள்ள ஆடவருக்கு RM1.94 மில்லியன் இழப்பீடு

கெடா, அக்டோபர் 29 – எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் மூளையில் கடுமையான காயமடைந்து நிரந்தரமாகச் செயலிழந்த மோட்டார் சைக்கிளோட்டிக்கு, கூலிம் செஷன்ஸ் நீதிமன்றம் 1.94 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி, சுங்கை காராங்கான் – மெர்பாவ் பூலாஸ் (Jalan Sungai Karangan – Merbau Pulas) சாலையில் இரவு 7.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. சாலை சேதமடைந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்துக் கூம்பைத் தவிர்க்க, எதிர்ப்பாதைக்குள் காரைச் செலுத்திய ஆடவர்தான் விபத்துக்கு 90 விழுக்காடு பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் சாலையின் நடுவிலிருந்த இரட்டைக் கோட்டுக்கு மிக அருகில் பயணித்ததால் 10 விழுக்காடு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

விபத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், தற்போது பேசவோ வேலை செய்யவோ இயலாத நிலையில் முழுமையாகப் படுக்கையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவரது அன்றாடத் தேவைகளுக்கு தாயார் மற்றும் தங்கையின் உதவியையே அவர் சார்ந்துள்ளார்.

காயங்களுக்கான இழப்பீடு, எதிர்கால வருமான இழப்பு, எதிர்காலப் பராமரிப்புச் செலவுகள், மருத்துவச் செலவுகள் மற்றும் பிற தேவைகளுக்காக மொத்தம் சுமார் 1.94 மில்லியன் ரிங்கிட் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்குச் செலவாக 40,000 ரிங்கிட் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில், இழப்பீட்டுத் தொகை மற்றும் பொறுப்புப் பகிர்வு தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!