Latestமலேசியா

இந்தோனேசியாவில் காட்டுத் தீ: 7 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பும் சிங்கப்பூர்

சிங்கப்பூர், அக்டோபர்-17,இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக, மலேசியாவைப் போன்று சிங்கப்பூரிலும் கடுமையான புகைமூட்டம் நிலவி வருவது தெரிந்ததே.

இந்நிலையில், அதற்குக் காரணமாக இருக்கலாம் என அடையாளம் காணப்பட்ட 7 நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தடுப்பு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பவுள்ளது.

சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் Grace Fu இதனை அறிவித்துள்ளார்.

எல்லை கடந்த புகைமூட்ட தூய்மைக்கேட்டுச் சட்டத்தின் கீழ், சிங்கப்பூர் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் இந்த நோட்டீஸ்களை அனுப்பும் என அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது நிலங்களில் ஏற்பட்டுள்ள தீயை உடனடியாக அணைக்கவும், தீ பரவுவதைத் தடுக்கவும், எரிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவும் உத்தரவிடப்படும்.

அதே சமயம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதும் பரிசீலனையில் இருப்பதாக அவர் கூறினார்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான செயல் திட்டங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றார் அவர்.

இதனிடையே, காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இந்தோனேசியாவுக்கு உதவ சிங்கப்பூர் தயாராக இருப்பதாகவும், செயற்கை மழையை ஏற்படுத்துவது உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படலாம் என்றும் Grace Fu கோடி காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!