Latestமலேசியா

இனவாதத் தூண்டல்களை புறக்கணித்து தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்போம்; ரமணன் வலியுறுத்து

புத்ராஜெயா, மார்ச்-10-நாட்டின் நிலைத்தன்மையை பாதுகாக்க, இனவாதத் தூண்டல்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மலேசியா என்பது மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இபான் மற்றும் கடசான் உள்ளிட்ட பல்வேறு இனங்களை கொண்ட நாடு.

எனவே இனவாதம் மற்றும் தீவிரவாதக் கருத்துகள் மூலம் மக்களைத் திசைதிருப்புவது முறையற்றது என, மனிதவள அமைச்சருமான அவர் சொன்னார்.

அண்மையக் காலமாக இன உணர்வுகளைத் தூண்டும் – சீண்டும் வகையிலான அறிக்கைகள், சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் கருத்துகள் அதிகரித்துள்ளன; அவை மக்களிடையே நிலவும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என்றார் அவர்.

மடானி அரசாங்கத்தின் சாதனைகளுக்கு எதிராக பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லாததால், சில தரப்பினர் வேறு வழியின்றி இதுபோல் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயலுகின்றனர்.

குறுகிய இன உணர்வுகளையும் வெறுப்புணர்வையும் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பதே இவர்களின் வேலையாகி விட்டது.

ஆனால், இந்த சிறிய ‘கும்பல்களின்’ பொறுப்பற்ற செயல்கள், 33 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்களின் எதிர்காலத்தைப் பணயம் வைக்கும் வகையில் உள்ளதாக புத்ராஜெயாவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ரமணன் கவலைத் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக, இன வேற்றுமை அமைதியான வாழ்வுக்கும் பரஸ்பர மரியாதைக்கும் தடையாக இல்லை என்பதை மலேசியர்கள் நிரூபித்துள்ளனர்; இதுவே நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது.

அதேநேரத்தில், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்கிறது.

எனவே, கருத்துச் சுதந்திரம் என்பது மக்களைத் தூண்டிவிடுவதற்கோ அல்லது பிளவுபடுத்துவதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என்றும், இனம், மதம், ஆட்சியாளர்கள் தொடர்பான 3R விவகாரங்களைத் தூண்டி விடுபவர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் ரமணன் தெரிவித்தார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!