Latest

இன, மத பேதமின்றி மக்களுக்குச் சேவை: பேராக் அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைக்கும் வூ கா லியோங்

கோலாலம்பூர், அக்டோபர் 20 –DAP அங்கம் வகிக்கும் பேராக் மாநில அரசாங்கம், இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சேவையாற்றி வருவதாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வூ கா லியோங் தெரிவித்தார்.

2022 முதல் இந்த அணுகுமுறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக வணக்கம் மலேசியாவுடனான சிறப்பு நேர்காணலில் அவர் கூறினார்.

வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மக்களின் சுமையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில், B40 தரப்பினருக்கு 10 முதல் 30 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கும் ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டமும் அடங்கும் என்றார் அவர்.

பல்வேறு அரசு நிறுவனங்கள் நடத்தும் மக்கள் நலத் திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், 35 முதல் 40 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்க வாய்ப்புள்ளதாக பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான வூ கூறினார்.

இதுகுறித்து ஆட்சிக்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாநில வரவு செலவுத் திட்டத்தில் நற்செய்திகள் இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

பெரும்பாலான வியாபாரிகள் நேர்மையாகச் செயல்பட்டாலும், அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் சிலர் விலைகளை உயர்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய வியாபாரிகளைக் கண்காணிக்க மாநில KPDN தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாதிக்கப்படும் பயனீட்டாளர்களும் தயங்காமல் புகாரளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

சிறு வியாபாரிகளுக்கும் புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கும் மாநில அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகவும், அவற்றை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வூ வலியுறுத்தினார்.

பேராக்கில் இந்தியச் சமூகத்திற்காக 7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதில் 6 மில்லியன் ரிங்கிட் சமூக மேம்பாட்டுக்கும், ஒரு மில்லியன் ரிங்கிட் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தனது பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியிலும், அனைத்து இன மக்களுக்கும் அரசாங்க உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்து வருவதாக அவர் கூறினார்.

பள்ளி மாணவர்களுக்கான ரொக்க உதவிகளும் இதில் அடங்கும் என்றார் அவர்.

இதனிடையே, 2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் தேவைகளை அறிந்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பல்வேறு உதவிகளை அறிவித்துள்ளதாக வூ தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளும் சிறந்த நிர்வாகமும் நிதிநிலையை வலுப்படுத்தியதால், இம்முறை B40 மட்டுமின்றி M40 தரப்பினருக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அரசாங்கத்தின் நலத்திட்டங்களும் நிதியுதவிகளும் உதவி தேவைப்படும் அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதிசெய்வதே தங்களின் முக்கியக் கடமை என வூ கா லியோங் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!