Latestமலேசியா

பல தசாப்தங்களாக நீடிக்கும் வீட்டுடைமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பினாங்கு முன்னேற்றம் – சுந்தரராஜூ

பட்டர்வொர்த் கம்போங் உஜோங் பத்து வீட்டுடைமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில், மறுமேம்பாட்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

பினாங்கு மாநில வீடமைப்பு வாரியத்துக்கும் (LPNPP) பாரமவுண்ட் புராப்பர்ட்டி (பட்டர்வொர்த்) நிறுவனத்துக்கும் இடையிலான மேம்பாட்டு ஒப்பந்தம் அக்டோபர் 25ஆம் தேதி கையெழுத்தானதாக பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ தெரிவித்தார்.

திட்டத்தின் முதல் கட்டத்தில், 350 மலிவு விலை வீடுகள் கட்ட முன்மொழியப்பட்டுள்ளன. முன்னதாக அறிவிக்கப்பட்ட சலுகையின்படி, தகுதி பெற்றதாக அடையாளம் காணப்பட்ட 268 அசல் குடியிருப்பாளர்களுக்கு, தலா RM100,000 வரை மதிப்புள்ள மாற்று வீடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

உள்ளூர் சமூகத்தின் வழிபாட்டுத் தேவைகளையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க, சம்பந்தப்பட்ட இரண்டு இந்துக் கோயில்களுக்கு இலவச நிலமும் ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பல தலைமுறைகளாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் வீட்டுடைமையின் நிச்சயமற்ற நிலைக்குத் தீர்வு காண்பதில் இந்த ஒப்பந்தம் முக்கியமான நடவடிக்கை என சுந்தராஜூ குறிப்பிட்டார்.

மறுமேம்பாட்டைச் செயல்படுத்த முன்வரும் திட்ட மேம்பாட்டாளரைக் கண்டறிவது உள்ளிட்ட சவால்கள் இருந்ததாகவும், மாநில அரசு, LPNPP மற்றும் தொடர்புடைய தரப்புகளின் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மற்றும் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த முன்னேற்றம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பெராய் கம்போங் மானிஸ் வீடமைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியிலும் அண்மையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். பல தசாப்தங்களாக நீடித்த குடியிருப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இவ்விரு திட்டங்களும் முக்கிய முன்னேற்றங்கள் என்றார்.

மாநில முதல்வர் சௌ கோன் இயோவ், முன்னாள் முதல்வரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் மற்றும் கம்போங் உஜோங் பத்து மக்கள் ஆகியோரின் ஆதரவுக்கும் பொறுமைக்கும் சுந்தராஜூ நன்றி தெரிவித்தார்.

“கம்போங் மானிஸின் 70 ஆண்டுகாலக் காத்திருப்பிலிருந்து கம்போங் உஜோங் பத்து மக்களின் 66 ஆண்டுகாலப் போராட்டம் வரை, எனது உறுதிப்பாடு ஒன்றுதான்—பினாங்கில் ஒவ்வொரு வீடமைப்பு முயற்சியிலும் மக்களின் நலனே முதன்மையாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!