
கோலாலம்பூர், அக்டோபர்-28,அவசர காலங்களில் பொது மக்கள் விரைவாக உதவி பெறுவதற்கு ஏதுவாக, SAVE ME 999 செயலியை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுமாறு, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவசர சூழ்நிலைகளில் பதற்றம் காரணமாக, 999 அவசர உதவி எண்ணைத் தொடர்புகொள்ளும்போது இருப்பிடத்தைத் தெளிவாகக் கூற முடியாத நிலை ஏற்படலாம் என அவர் தெரிவித்தார்.
SAVE ME 999 செயலி மூலம் மருத்துவம், தீயணைப்பு, குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட அவசர உதவிகளை நேரடியாகக் கோர முடியும்.
மேலும், இருப்பிடம், குறுஞ்செய்தி, புகைப்படம், வீடியோ மற்றும் குரல் பதிவுகளையும் அனுப்ப முடியும் என்பதால், அவசர உதவிப் பணியாளர்கள் நிலைமையை விரைவாகப் புரிந்துகொள்ள முடியும்.
கேட்கும் திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கும் இச்செயலி பயனுள்ளதாக அமையும் என ஃபாஹ்மி குறிப்பிட்டார்.
என்றாலும், SAVE ME 999 செயலி, வழக்கமான 999 அவசர உதவி எண்ணுக்கு மாற்றானது அல்ல என்பதை அவர் தெளிவுப்படுத்தினார்.
ஆனாலும், ஆபத்து அவசர நேரங்களில் தயாராக இருக்கும் வகையில், பொது மக்கள் இச்செயலியை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து வைத்திருக்குமாறும் ஃபாஹ்மி அறிவுறுத்தினார்.



