Latestமலேசியா

இரண்டே மாதங்களில் RM6 மில்லியன் இணைய மோசடி; 64 வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூர், அக்டோபர்-30,இணைய மோசடி மூலம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே சுமார் 6 மில்லியன் ரிங்கிட் சம்பாதித்ததாக நம்பப்படும் கும்பலைக் குடிநுழைவு இலாகா முறியடித்துள்ளது.

கோலாலம்பூர், ஜாலான் கெரிஞ்சியிலுள்ள 4 ஆடம்பர அடுக்குமாடி வீடுகளிலும், The Mines-ஸில் உள்ள இரண்டு பங்களா வீடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 64 வெளிநாட்டினர் கைதுச் செய்யப்பட்டனர்.

அவர்களில் 44 பேர் சீனப் பிரஜைகள், 19 பேர் வியட்நாமியர்கள், ஒருவர் மியன்மார் நாட்டவர் எனக் குடிநுழைவு இலாகா தலைமை இயக்குநர் சக்காரியா ஷாபான் தெரிவித்தார்.

போலியான சேவைகளை இணையத்தில் விளம்பரப்படுத்தி, குறிப்பாக வெளிநாட்டினரைக் குறிவைத்து, அந்தக் கும்பல் நாளொன்றுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரிங்கிட் வரை மோசடி செய்ததாக நம்பப்படுகிறது.

இந்த மோசடி ‘ஊழியர்கள்’ தினமும் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை ‘வேலைசெய்ததும்’, மாதச் சம்பளமாக 3,000 முதல் 6,000 ரிங்கிட் வரையில் பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 28 மடிக்கணினிகள், 81 கைப்பேசிகள் உள்ளிட்ட மின்னியல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த மோசடியில் உள்ளூர் ஆட்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!