Latestஉலகம்

இலங்கையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் துரித உணவுகள் & இனிப்புகளுக்கு தடை

கொழும்பு, ஜூன் 24 – மாணவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய் அபாயங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை அரசு, பள்ளிகளில் துரித உணவுகள் மற்றும் இனிப்புப் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளை பள்ளிகளில் விற்பனை செய்யவோ வழங்கவோ அனுமதிக்கப்படாது என்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை ஊக்குவிக்கும் நிறுவனங்களின் எந்தவொரு உதவியையும் பள்ளிகள் ஏற்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தடை பர்கர், பீட்சா, சொசேஜ், டோனட், ஐஸ்கிரீம், பிஸ்கட், பாஸ்ட்ரி, சுவையூட்டப்பட்ட பால், எனர்ஜி பானங்கள் மற்றும் பொரித்த சிற்றுண்டிகள் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களுக்கு பொருந்தும்.

இந்த நடவடிக்கை நாடு முழுவதுமுள்ள சுமார் 40 லட்சம் மாணவர்களை உள்ளடக்கியதாகும்.

மாணவர்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்றும் வகையில், அரிசி, புதிய பழங்கள், காய்கறிகள், மீன், இறைச்சி, முட்டை, இயற்கைப் பழச்சாறுகள் மற்றும் பசும்பால் போன்ற சத்தான உணவுகளை வழங்க பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அரசாங்கப் புள்ளிவிவரங்களின்படி, 2024ஆம் ஆண்டில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 12 விழுக்காட்டினர் அதிக உடல் எடையுடனும், 3 விழுக்காட்டினர் உடல் பருமனுடனும் இருந்துள்ளனர்.

மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் தொற்றாத நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!