
கோலாலம்பூர், செப்-17-இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர்களிடமிருந்தே கேட்டறிந்து, 2030ஆம் ஆண்டுக்குள் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் மலேசியத் தமிழ் போதகர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஐக்கிய சங்கம் (TPCFM), ‘Vision 2030’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனையொட்டி நடைபெற்ற கலந்துரையாடலில் 9 மாநிலங்களைச் சேர்ந்த இளம் போதகர்கள், இளைஞர் தலைவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் பங்கேற்றனர். செயற்கை நுண்ணறிவு சவால்கள், இளைஞர்களைத் தவறான பாதையிலிருந்து தடுப்பது, தொழில்முனைவு, வணிக வாய்ப்புகள், 3R விழிப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டன.
இளைஞர்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் மற்றும் களநிலைத் தகவல்களின் அடிப்படையில், அவர்களின் தேவைகளுக்கேற்ப திட்டங்கள் உருவாக்கப்படும் என TPCFM தலைவர் மறைத்திரு. ஹென்றி சந்தனம் தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் TPCFM கிளைகளை விரிவுபடுத்தி, தமிழ் கிறிஸ்தவ சமூகத்தினரை ஒருங்கிணைப்பதும் ‘Vision 2030’ திட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்று என அவர் கூறினார். தற்போது TPCFM-இன் கீழ் 250-க்கும் மேற்பட்ட சபைகள் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், வழிகாட்டுதல் இல்லாமல் திசைமாறும் இளைஞர்களை அடையாளம் கண்டு, குடும்பம், சமூகம் மற்றும் நாட்டிற்குப் பயனளிக்கும் பாதையில் வழிநடத்துவது அவசியம் என Victorious Living Assembly தலைமைப் போதகர் மறைத்திரு. டாக்டர் பிலிப் ஜெயபாலன் தெரிவித்தார்.
இதனிடையே, MITRA மானியங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த தகவல்களை அடிமட்ட சமூகத்தினரிடம் கொண்டு சேர்ப்பதுடன், அவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்க TPCFM திட்டமிட்டுள்ளதாக மறைத்திரு. ஹென்றி சந்தனம் தெரிவித்தார்.



