
செப்பாங், செப்டம்பர்-18,நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் தொடர்பான சர்ச்சையில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் தாயகம் திரும்பியுள்ள நிலையில், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் பிரகடனத்தை அரசிதழில் வெளியிடும் நடவடிக்கையைக் கைவிடுவதாக மாநிலச் செயலகம் அறிவித்துள்ளது.
துபாய் பயணம் முடித்து நேற்றிரவு KLIA விமான நிலையம் வந்தடைந்த துவாங்கு முஹ்ரிஸுக்கு 200-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
‘துவாங்கு முஹ்ரிஸ் வாழ்க’ என அவர்கள் ஆதரவு முழங்கங்களை எழுப்பினர்.
இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காகவே தாம் நாடு திரும்பியுள்ளதாகவும், நேரடியாக அரண்மனைக்குச் செல்வதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, துவாங்கு முஹ்ரிஸைப் பதவியிலிருந்து நீக்கும் மாநில ஆட்சிக் குழுவின் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், அதுகுறித்த பிரகடனத்தை அரசிதழில் வெளியிட உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், மாநில ஆட்சிக் குழுவுக்கு ஆட்சியாளரை நீக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என சட்டத் துறை அலுவலகம் (AGC) தெளிவுப்படுத்தியது.
இதனையடுத்து, இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்பதை ஏற்றுக்கொண்டு, பிரகடனத்தை அரசிதழில் வெளியிடும் அல்லது செயல்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளப் போவதில்லை என நெகிரி செம்பிலான் மாநிலச் செயலகம் உறுதியளித்துள்ளது.
மாநில செயலகம் தனது முடிவிலிருந்து பின்வாங்கியுள்ள நிலையிலும், துவாங்கு முஹ்ரிஸ் அரண்மனை திரும்பியுள்ள சூழலிலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



