
தைப்பே, செப்டம்பர்-18,68 மாதச் சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கப்பட்டும், அது போதாது என தைவானில் Micron நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் முன்னணி memory சில்லு தயாரிப்பு நிறுவனமான Micron Technology, தைவானில் பணியாற்றும் தனது ஊழியர்களுக்கு 2026 நிதியாண்டுக்காக 35 முதல் 68 மாத சம்பளத்திற்கு இணையான வெகுமதிகளை அறிவித்துள்ளது.
இதில் குறைந்தபட்ச ரொக்கத் தொகை சுமார் 17 லட்சம் தைவான் டாலராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், AI தொழில்நுட்ப வளர்ச்சியால் memory சில்லுகளுக்கான உலகளாவியத் தேவை அதிகரித்துள்ள நிலையில், வழங்கப்படும் தொகை போதுமானதாக இல்லை என ஊழியர்கள் கூறுகின்றனர்.
Micron-னின் தைவான் தொழிற்சங்கங்கள், ஒருமுறை போனஸாக 83 மாத சம்பளத்திற்கு இணையான தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு இலாபத்தில் 15 விழுக்காட்டை ஊழியர்களுக்கான போனஸாகப் பகிர்ந்தளிக்கும் நிரந்தர திட்டத்தையும் அவர்கள் கோரியுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடும் என்றும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.



