Latestமலேசியா

உடல் எடையைக் குறைக்கும் 697 மருந்துப் பொருட்கள் பறிமுதல் – சுகாதார அமைச்சு

கோலாலம்பூர், நவ- 3 –மலேசியாவில் இன்னும் பதிவு செய்யப்படாத, மருத்துவ ஆய்வில் உள்ள உடல் எடையைக் குறைக்கும் 697 Retatrutide மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சு பறிமுதல் செய்துள்ளது. அவை 2025ஆம் ஆண்டு முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட 12 அமலாக்க நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்டவை.

மருந்துகளின் மொத்த மதிப்பு 341,000 ரிங்கிட் என சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார். அம்மருந்து இன்னும் சுகாதார அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட மருந்துப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார். டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகப் பிரபலங்கள் GLP-1 வகை மருந்துகளை விளம்பரப்படுத்துவதுடன், இணையத்தில் அவை கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவது குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் அவர் பதிலளித்தார்.

இவ்வேளையில் Ozempic – Semaglutide மருந்தின் சட்டவிரோத விற்பனையைக் கட்டுப்படுத்த ஏழு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றின் மூலம் 64,170 ரிங்கிட் மதிப்புள்ள 62 மருந்துப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பதிவு செய்யப்படாத மருந்துகளின் விற்பனையைத் தடுக்கும் வகையில், சுகாதார அமைச்சின் மருந்தக அமலாக்கப் பிரிவு இணையதள விளம்பரங்களை அகற்றுவது, புகார்களை விசாரிப்பது மற்றும் சோதனைகளை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இணையவழி வர்த்தகத் தளங்கள் மூலம் இத்தகைய மருந்துகள் விற்பனை செய்யப்படுவதையும் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, Retatrutide தற்போது மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ள ஆய்வு மருந்து என்றும், உலகின் எந்தவொரு மருந்து ஒழுங்குமுறை அமைப்பிடமிருந்தும் சந்தைப்படுத்துவதற்கான அனுமதியை இன்னும் பெறவில்லை என்றும் சுகாதார அமைச்சகம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்தவும், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும் சட்டவிரோத விற்பனைக்கு எதிரான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!