
கிள்ளான், செப்- 25 – உயர்கல்வி அமைச்சின் (KPT) Anugerah Tokoh Siswa Negara (ATSN) 2026 விருதின் Anugerah Tokoh Kepimpinan Siswa பிரிவில், கிள்ளானைச் சேர்ந்த 22 வயது தனிகேஸ் குமார் தேசிய Top 10 இறுதிப் போட்டியாளராகத் தேர்வாகியுள்ளார்.
இந்தப் பிரிவின் Top 10-இல் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய மாணவரும் இவர்தான். வெற்றியாளர் அக்டோபர் 1ஆம் தேதி Putrajaya Marriott Hotel-லில் நடைபெறும் விருது விழாவில் அறிவிக்கப்படவுள்ளார்.
B40 குடும்பத்தில் வளர்ந்த தனிகேஸின் தந்தை குமார் Grab ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். Multimedia University (MMU)-யில் Electronics துறையில் Telecommunications பிரிவில் நான்காம் ஆண்டு பயிலும் தனிகேஸ், Yayasan Telekom Malaysia (YTM) கல்வி உதவித்தொகை மாணவரும் ஆவார்.
19 வயதிலேயே MMU மாணவர் பிரதிநிதித்துவ மன்றத்தின் (SRC) தலைவராகப் பொறுப்பேற்ற இவர், அந்தப் பதவியை வகித்த மிக இளம் மாணவர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதுவரை பல்கலைக்கழகம், தேசிய மற்றும் அனைத்துலக அளவில் 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் ஏற்பாடு செய்தும் உள்ளார். ஜப்பான், துருக்கி மற்றும் தாய்லாந்திலும் அனைத்துலக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
MMU Student Prodigy Award 2025 பெற்ற தனிகேஸை, ATSN 2026 தேசிய விருதுக்கு MMU பரிந்துரைத்தது.
“உங்கள் தொடக்கம் உங்கள் முடிவைத் தீர்மானிப்பதில்லை. வயது, குடும்பப் பின்னணி அல்லது இனம் உங்கள் கனவுகளுக்கு எல்லையாக இருக்கக்கூடாது,” என்பதே இளைஞர்களுக்கு தனிகேஸ் கூறும் செய்தி.
கிள்ளானில் தொடங்கிய அவரது பயணம் இன்று தேசிய Top 10 வரை வந்துள்ளது. அடுத்த எதிர்பார்ப்பு அக்டோபர் 1, அன்றுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படவுள்ளார்.



