
சிப்பாங், செப்-29-மலேசியாவில் நடைபெறவுள்ள F1 Bahrain GP பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனை ஒரு லட்சத்தை எட்டும் என சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பாதை (SIC) நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே சுமார் 95,000 மூன்று நாள் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ள நிலையில் அது அவ்வாறு கூறியுள்ளது.
இம்முறை போட்டிக்கு கிடைத்துள்ள வரவேற்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. மொத்த டிக்கெட்டில் சுமார் 50 விழுக்காடு டிக்கெட்டை அனைத்துலக ரசிகர்கள் வாங்கியுள்ளனர். அவ்வகையில் அவர்களின் வருகை நாட்டின் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்துக்கும் பயனளிக்கும் என SIC தலைமை நிர்வாகி Azhan Shafriman Hanif தெரிவித்தார்.
அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை நடைபெறும் அப்பந்தயத்திற்காக SIC-ல் பல்வேறு விரைவான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியப் பகுதிகளில் ஒன்று ‘பேடாக்’ (paddock) என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, போட்டியைக் காண வரும் ரசிகர்களால் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்கு உந்துதலாக இருக்கும் என பஹ்ரைன் அனைத்துலக சுற்றுப்பாதை (BIC) தலைமை நிர்வாகி Sheikh Salman Isa Al Khalifa கூறினார். அப்பந்தயம் மலேசியாவுக்கு சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 979 மில்லியன் ரிங்கிட் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2008 ஆம் ஆண்டு SIC-ல் நடைபெற்ற மலேசிய பந்தயத்தில் மூன்று நாட்களில் அதிகபட்சமாக 126,690 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். 1999 முதல் 2017 வரை நடத்தப்பட்ட மலேசிய GP, அதன் பிறகு கைவிட்டப்பட்டு, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலேசிய ரசிகர்களைக் கவர திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.



