
இஸ்கண்டார் புத்ரி, செப்டம்பர்-29,ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து சோதனையின் போது, பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 43 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இஸ்கண்டார் புத்ரி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமுலாக்கப் பிரிவினரால் நடத்தப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை, பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சட்டவிரோத பந்தயங்கள், ஆபத்தான ஓட்டுதல் மற்றும் வாகனங்கள் மாற்றியமைக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
அங்கீகரிக்கப்படாத எக்ஸாஸ்ட் (exhaust) மாற்றங்கள், செல்லுபடியாகாத சாலை வரி அல்லது காப்பீடு இல்லாதது உள்ளிட்ட குற்றங்களுக்காக 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அந்த 43 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், ஓட்டுநர் உரிமமின்றி வாகனமோட்டுதல், பக்கவாட்டு கண்ணாடி இல்லாதது மற்றும் விதிமுறைகளுக்கு மாறான எண் பதிவுப் பட்டைகளைப் பயன்படுத்தியதற்காக பல அபராத சம்மன்களும் பிறப்பிக்கப்பட்டன.
சாலைப் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், பொறுப்பற்ற முறையில் வாகனமோட்டுவதைத் தடுக்கவும் இத்தகைய சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என போலீஸ் எச்சரித்துள்ளது.



