
ஜகார்த்தா, செப்டம்பர்-29,தங்களின் காலணிகளுக்குள் 5 கிலோ செயற்கை போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்த முயன்ற 5 மலேசியர்களை இந்தோனேசிய அதிகாரிகள் ஜகார்த்தா சுகார்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் கைதுச் செய்துள்ளனர்.
கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் ஜகார்த்தா சென்றடைந்த இவர்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை அடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் பிடிபட்டனர்.
ஒவ்வொரு சந்தேக நபரும் தங்களது காலணிகளின் உள்பகுதியில் தலா 500 கிராம் எடையுள்ள இரண்டு பாக்கெட்டுகள் வீதம், மொத்தம் 10 பாக்கெட்டுகளில் 5 கிலோ etomidate இரக போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், இவர்கள் டெலிகிராம் செயலி மூலம் வந்த வழிகாட்டலின்படி செயல்பட்டதும், மத்திய ஜகார்த்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் சீனாவைச் சேர்ந்த ஒருவரிடம் இந்த காலணிகளை ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த சீன நாட்டவரையும் கைதுச் செய்த அந்நாட்டு போலீஸ், வட ஜகார்த்தாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இயங்கி வந்த போதை வேப் திரவ தயாரிப்பு ஆய்வுக் கூடத்தை முற்றுகையிட்டது.
அங்கிருந்து 21,000 வேப் கருவிகள் உள்ளிட்ட சுமார் 33.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



