
நியூ யோர்க், செப்டம்பர்-8,உலகம் வரும் ஆண்டுகளில் மேலும் கடுமையான வெப்பநிலையை எதிர்கொள்ளக்கூடும் என ஐநா சபை எச்சரித்துள்ளது.
உலகளாவிய வெப்ப நிலை உயர்வை 1.5 பாகை செல்சியஸுக்குள் கட்டுப்படுத்தும் இலக்கை மீறுவது தற்போது தவிர்க்க முடியாத நிலையை எட்டியுள்ளதாக ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் ‘Limiting Overshoot’ என்ற புதிய அறிக்கைத் தெரிவித்துள்ளது.
எனவே, சிறந்த சூழ்நிலையில் கூட உலக வெப்ப நிலை சுமார் 1.8 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கொள்கைகள் தொடர்ந்தால், வெப்ப நிலை உயர்வு சுமார் 2.6 பாகை செல்சியஸ் வரை செல்லக்கூடும்.
இதனால் கடுமையான வெப்ப அலைகள், கடல் நீர் மட்ட உயர்வு, பல்லுயிர் இழப்பு மற்றும் பருவநிலை தொடர்பான பேரிடர்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
எனவே, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை உலக நாடுகள் மிக வேகமாகக் குறைக்க வேண்டும் என ஐநா. வலியுறுத்தியுள்ளது.
வெப்ப நிலையில் ஏற்படும் ஒவ்வொரு சிறிய அதிகரிப்பும் முக்கியமானது என்பதால், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை அவசியம் என ஐ.நா தெரிவித்துள்ளது.



