Latestமலேசியா

உலகளாவிய நெருக்கடியிலும் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை; மடானி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குப் பலன்

கோலாலாம்பூர்,செப்.30- உலகளாவிய விநியோகச் சங்கிலியின் நெருக்கடி மற்றும் எரிசக்தி செலவின உயர்வைக் கடந்து, நாட்டின் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடற்ற நிலையை மலேசியா வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.

தொழில்துறை பங்காளிகளுடன் இணைந்து மடானி அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் இதற்கு முதன்மைக் காரணமாகும்.

இது குறித்து கருத்துரைத்த நாட்டின் முன்னணி பொருளாதார ஆலோசகர் தான் ஸ்ரீ ஹசான் மெரிக்கான், நாம் இன்று அனுபவிக்கும் இந்த அத்தியாவசியப் பொருட்களின் நிலைத்தன்மை தற்செயலாக நிகழ்ந்தது அல்ல என்றார்.

மாறாக, இது அரசாங்கத்தின் ஆரம்பக்கட்ட திட்டமிடல் மற்றும் இலக்கு நோக்கிய மானிய மாற்றங்களுக்குக் கிடைத்த பலன் என அவர் விளக்கினார்.

அதே கருத்தை ஆமோதித்த, MIET எனப்படும் மலேசிய உள்ளடக்கப் பொருளாதார உருமாற்ற அமைப்பின் தலைவரும், மலேசிய தேசிய பல்கலைக்கழகமான UKM-ன் தொழில்முறை ஆலோசகருமான மனோகரன் மொட்டையன், வட்டார நாடுகளின் அரசியல் நிலைத்தன்மையற்றச் சூழலால் நாமும் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதனைச் சமாளிக்கும் திறனைப் பெற்றுள்ளோம் என்றார்.

அரசாங்கத்தின் ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளால் நமது ஏற்றுமதி வலுவாகவே உள்ளது; கச்சா எண்ணெய் விலையும் தற்போது ஏற்றத்திலிருப்பது மலேசியாவுக்கு உதவியாக உள்ளதாக அவர் சொன்னார்.

மேலும், அரசாங்கம் சரியான முறையில் விலைவாசியைக் கட்டுப்படுத்தியுள்ளதால், விலைவாசி உயர்வின் தாக்கமும் குறைந்துள்ளது.

குறிப்பாக பெட்ரோல் மானியம் அண்மையில் டீசலுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதை மனோகரன் சுட்டிக் காட்டினார்.

பெரும்பாலும் வணிக வாகனங்கள் டீசலைத்தான் அதிகமாகப் பயன்படுத்துவதால், அவற்றுக்கான இந்த டீசல் மானியம் செலவுகளைக் குறைத்து விலைவாசியைக் கட்டுப்படுத்தப்படும் என்றார் அவர்.

BUDI MADANI திட்டத்தின் கீழ், தகுதிப்பெற்ற 90 விழுக்காடு உள்நாட்டுப் பயனர்களைப் பாதுகாக்கும் வகையில் RON95 பெட்ரோல் மானிய விலை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென்னில் தக்க வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சரக்கு போக்குவரத்து மற்றும் உணவு உற்பத்தித் துறைகளின் சுமையைக் குறைக்க, டீசல் கட்டுப்பாட்டு மானியத் திட்டமும், ‘BUDI AGRI KOMODITI’ வழியாக விவசாயிகளுக்கு மாதம் 400 ரிங்கிட் வரையிலான நிதியுதவியும் வழங்கப்பட்டு, பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தவிர, மக்களின் வாழ்வாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில், நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக 15 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் STR மற்றும் SARA ரொக்க உதவித் திட்டங்கள் இவ்வாண்டில் செயல்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத் மீள்திறனை வலுப்படுத்துவதில் பொது மக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியமானது என்று தான் ஸ்ரீ ஹசான் மெரிக்கான் நினைவூட்டினார்.

பொது மக்கள் தங்களின் அன்றாடப் பயன்பாடுகளில் விரயங்களைத் தவிர்த்து, சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதோடு, நடப்பு பொருளாதார நிலவரங்களை ‘pantaukrisis.gov.my’ எனும் அதிகாரப்பூர்வ இணையப்பக்கம் வழி அறிந்து கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!