Latestஇந்தியா

“என் பேச்சைக் கேட்டு தங்கம் வாங்குவதை மக்கள் குறைத்ததாலேயே விலை சரிந்துள்ளது; பிரதமர் மோடி

லக்னோவ், நவம்பர்-22 – தங்கத்தின் விலை சரிவைக் கண்டு வரும் நிலையில், தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு தான் விடுத்த வேண்டுகோளை மக்கள் ஏற்றதாலேயே இப்போது விலை குறைந்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

​உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், ஓராண்டுக்கு முன்பு தேவையின்றித் தங்கம் வாங்க வேண்டாம் எனத் தாம் கூறியதை நினைவுகூர்ந்தார்.

அப்போது சமூக வலைத்தளவாசிகள் அதனை கேலியும் கிண்டலும் செய்தனர்.

ஆனால், தனது ஆலோசனையை மக்கள் ‘பின்பற்றியதால்’, இப்போது பணத்தைச் சேமிக்க முடிந்திருப்பதாக மோடி கூறிக் கொண்டார்.

உலகச் சந்தையில் தங்க விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாகச் சரிந்து, கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய வாராந்திர வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கம் 3,500 அமெரிக்க டாலருக்கு அதாவது சுமார் 14,395 ரிங்கிட்டுக்கு வர்த்தகமான நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 9 விழுக்காடு வரை விலை குறைந்துள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

​இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்க விலை குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 12, 508 ரூபாய்க்கும் (சுமார் 555 ரிங்கிட்), 22 கேரட் தங்கம் 11,465 ரூபாய்க்கும் (சுமார் 509 ரிங்கிட்), 18 கேரட் தங்கம் 9,381 ரூபாய்க்கும் (சுமார் 416 ரிங்கிட்) விற்பனை செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!