
கோலாலம்பூர், நவம்பர்-21,கோலாலம்பூரில் பட்டப்பகலில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கேபிள் திருட்டில் ஈடுபட்ட துணிகரச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Threads தளத்தில் பகிரப்பட்டுள்ள 38 வினாடி வீடியோவில், கருப்பு நிற உடை மற்றும் முகமூடி அணிந்த சிலர், மேம்பாலத்திற்கு அருகிலுள்ள சாலையில் கேபிள்களை வெட்டி இழுத்துச் செல்வது பதிவாகியுள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில், அந்தக் கும்பல் கருப்பு நிற பிக்கப் ட்ரக் மற்றும் செடான் கார் ஆகிய இரண்டு வாகனங்களில் ஏறித் தப்பியோடியது.
அங்கிருந்த பொது மக்கள் சிலர் போக்குவரத்துக் கூம்புகளை (traffic cones) வீசி அவர்களைத் தடுக்க முயன்றும், அவர்கள் வேகமாகத் தப்பிச் சென்றனர்.
கோலாலம்பூர் TREC பகுதிக்கு அருகே பொது மக்கள் முன்னிலையில் இச்சம்பவம் நடந்ததாகவும், அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும் வீடியோவைப் பதிவிட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், இச்சம்பவம் நடந்த சரியான நேரம், இடம் மற்றும் சந்தேக நபர்களின் அடையாளம் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
போலீஸ் விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



