
கோலாலம்பூர், ஜூலை-14-தமது அரசாங்கம் பதவிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்திருக்கிறார்.
அதன் வழி முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர் மீண்டும் நிராகரித்துள்ளார். மலேசியர்கள் அரசியல் ஸ்திரத்தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சார சூழல்களைச் சந்திக்க அவர்கள் விரும்பவில்லை. எனவே அடுத்த பொதுத் தேர்தல் வரை நடப்பில் உள்ள அரசாங்கம் முழுத் தவணையையும் பூர்த்தி செய்ய அவகாசம் வேண்டும் என பிரதமர் கூறினார்.
அரசியல் செய்வதை விட்டு விட்டு, ஆட்சி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் குரலுக்குச் செவி சாய்ப்பதாக Anwar மேலும் கூறினார்.
Hormuz நெருக்கடியின் தீவிரத்தையும் உள்நாட்டு அரசியல் உறுதித்தன்மையின்றி இருப்பதையும் சுட்டிக் காட்டி முன் கூட்டியே தேர்தல் நடத்த்கப்பட வேண்டுமா என நாடாளுமன்றத்தில் எழுப்பட்ட கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார்.
அடுத்த பொதுத் தேர்தல் பிப்ரவரி 2028-க்குள் நடத்தப்பட வேண்டும். இருப்பினும் Pakatan Harapan மற்றும் Barisan Nasional இடையே உறவுகள் சுமூகமாக இல்லை என்பதால், இவ்வாண்டின் பிற்பகுதியில் திடீர் தேர்தல்கள் நடத்தப்படலாம் என ஆரூடங்கள் வெளியாகியுள்ளன.
ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள இந்தக் கூட்டணிகள், மாநில அளவிலான தேர்தலில் நேருக்கு நேர் மோதி வருகின்றன. கடந்த சனிக்கிழமை ஜோகூர் தேர்தலில் BN 56 இடங்களில் 48 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது.
PH-ன் வசம் இருந்த 12 தொகுதிகள் எட்டாகக் குறைந்தன. அடுத்து ஆகஸ்ட் முதல் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் இரு கூட்டணிகளும் மீண்டும் நேருக்கு நேர் களமிறங்குகின்றன.



