
விழுப்புரம், நவம்பர்-21,தமிழகத்தில் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்க வேண்டி, போலீஸாரே போலீஸ் நிலையத்தில் யாகம் நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்புடி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி காணாமல் போனார்.
40 நாட்களாகியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம், சத்தியமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து சந்தேகத்திற்கிடமான மரணங்களும் விபத்துகளும் நிகழ்ந்தன.
காட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது, கிணற்றில் அழுகிய சடலம் மீட்கப்பட்டது, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் விபத்தில் உயிரிழந்தது உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.
இந்நிலையில், காணாமல் போன சிறுமி விரைவில் கிடைக்கவும், அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் குறையவும் வேண்டி, சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் தலைவர் தலைமையில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டுள்ளது.
இதற்காகப் புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டு, போலீஸ் நிலையத்திற்குள்ளேயே யாக குண்டம் அமைத்து பூஜைகள் செய்யப்பட்டன.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குற்றங்களைத் தடுக்கவும், காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்கவும் அறிவியல் ரீதியான விசாரணையை மேற்கொள்வதற்குப் பதிலாக, போலீஸார் யாகம் நடத்துவது முறையா எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதச்சார்பற்ற அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் போலீஸ் நிலையத்தில் மதச் சடங்கு நடத்தப்பட்டதும் விவாதப் பொருளாகியுள்ளது.



