காப்பீட்டு தொகைக்காக 7 வயது மகனை கொன்ற சீன தந்தை; வெளிச்சத்திற்கு வந்த உண்மை சம்பவம்

சீனா, நவம்பர் 14 – சீனாவில் காப்பீட்டு பணத்தைப் பெறும் நோக்கில், தனது 7 வயது மகனைத் திட்டமிட்டு கொன்ற தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, தனது மனைவியின் கள்ள தொடர்பைக் கண்டறிந்த பின்னர், கடும் கோபமடைந்த அந்த ஆடவர், தனது டிரக் ஓட்டுநர் சகோதரனுடன் இணைந்து சாலை விபத்து போல சித்தரித்து மகனை கொலை செய்தார்.
அந்த ஆடவர், தன்னுடைய காரிலேயே மகனை விட்டு விட்டு பின்னர் கீழேயிறங்கியுள்ளார். திட்டமிட்டபடி தனது சகோதரன் ஓட்டி வந்த லாரியை வைத்து அக்காரை மோதியதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். பின்னர் 1,80,000 யுவான் காப்பீட்டு தொகையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அந்த ஓட்டுநர் போலி ஆவணங்களுடன் சட்டவிரோதமாக டிரக் ஓட்டியது தெரியவந்ததைத் தொடர்ந்து விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான செய்தி, சீன நாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைத் தொடர்ந்து, 32 மில்லியன் பார்வைகளைப் பெற்று பலரின் கண்டனங்களையும் பெற்று வருகின்றது.



