
கங்கார், ஆகஸ்ட்-22-பெர்லிஸில், காரில் இரகசிய எரிபொருள் தொட்டியை அமைத்து மானிய விலையிலான பெட்ரோலை கடத்த முயன்ற பெண் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
பாடாங் பெசாரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், அந்த 29 வயது பெண் தனது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூடுதல் எரிபொருள் தொட்டியில் பெட்ரோல் நிரப்பியபோது அதிகாரிகளால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார்.
உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN-னின் அதிகாரிகள், ஒரு வார கால தீவிர கண்காணிப்புக்கு பிறகு இந்த அதிரடி சோதனையை நடத்தினர்.
இந்த நடவடிக்கையில் காரில் இருந்த சுமார் 260 ரிங்கிட் மதிப்பிலான 130 லிட்டர் பெட்ரோலும், அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான பெண் மீது 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 1 மில்லியன் ரிங்கிட் வரை அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.



