
கிளாந்தான் சுங்கை கோலோக்கில் சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் மலேசியர் கைது
கோத்தா பாரு, பிப்ரவரி 19 –
தாய்லாந்து மற்றும் கிளாந்தானின் எல்லை பகுதியான சுங்கை கோலோக் (Sungai Golok) நகரில் நடைபெற்ற போலீஸ் சோதனை நடவடிக்கையின் போது, 100க்கும் மேற்பட்ட ‘எக்ஸ்டசி’ (ekstasi) மாத்திரைகள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 30 வயதுடைய அந்த நபர், ஜாலான் சாரோன் கெட் (Jalan Charoen Khet) பகுதியில் உள்ள வங்கியின் முன்பு சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்ததை போலீசார் கவனித்துள்ளனர். உடனடியாக சோதனை மேற்கொண்டபோது அந்த ஆடவரிடமிருந்து 109 எக்ஸ்டசி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கை கொலோக் போலீஸ் தலைவர் Kolonel Thun Sirikhunt தெரிவித்தார்.
எல்லைப்புற நகரங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும், சட்டத்தை மீறும் எவராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
கைது செய்யப்பட்ட மலேசியர் மேல் விசாரணைக்காக சுங்கை கோலோக் போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



