Latestமலேசியா

கிள்ளான், கம்போங் ஜாவா 3ஆவது மைல் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

ஷா அலாம், ஜூன்-2-கிள்ளான், கம்போங் ஜாவா 3 ஆவது மைலில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழாவில் 3,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த திருவிழாவில் காலை 9 மணிக்கு தொடங்கிய பால் குடம் ஊர்வலத்தில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அருகேயுள்ள முனிஸ்வரர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக நடந்து சென்று ஆலயம் வந்தடைந்து தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

கடுமையாக வெயில் இருந்தபோதிலும் பக்தர்களுக்கு தாகம் தீர்ப்பதற்கு வசதியாக ஆலாய வளாகத்தில் தண்ணீர் பந்தல் மற்றும் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பெரும் உதவியாக இருந்தது.

முருகனுக்கு பாலபிஷேகம், வேல் அபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜைக்குப் பின் பக்தர்களுக்கு வாழை இலையில் பல்வேறு பதார்த்தங்களுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

வைகாசி திருவிழாவின் உச்சக் கட்டமாக மாலையில் தொடங்கிய இரத ஊர்வலம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, கம்போங் ஜாவா சாலை வழியாக , தாமான் டேசா லத்தானியா, தாமான் மஸ்னா ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள பக்தர்களுக்கு காட்சி தந்ததோடு , பக்தர்களின் தீபாரதனை மற்றும் அர்ச்சனை ஏற்றுக்கொண்டு நள்ளிரவு 12 மணியளவில் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.

சிலாங்கூர் மாநில ம.இ. கா தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கர், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உட்பட பல பிரமுகர்களும் சிறப்பு வருகை புரிந்தனர்.

இந்த நிகழ்ச்சி எல்லா வகையிலும் சிறப்பாகவும், அமைதியாகவும் நடைபெறுவதற்கு பெரும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய பக்தர்கள் மற்றும் ஆலய நிர்வாக குழுவினருக்கும் ஆலய தலைவர் விஸ்வநாதன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!