
கோலாலம்பூர், மார்ச்-1-பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அல் குர்ஆன் காலால் மிதித்த சர்ச்சையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும், அரசாங்கம் ஏற்கனவே சட்டப்படி முழுமையான விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
”இவ்விவகாரம் மிகவும் முக்கியமானது, மேலும் எந்தவிதமான அவமதிப்பும் அல்லது சட்ட மீறலும் நடந்திருந்தால், அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் அடிப்படையில் நீதி நிலைநாட்டப்படும்” என்றும் அவர் உறுதியளித்தார்.
எனவே, மக்கள் சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பாமல், அதிகாரப்பூர்வ விசாரணையின் முடிவுக்குக் காத்திருக்க வேண்டும் என்றார் அவர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மற்ற சில சமய அவமதிப்புச் சம்பவங்களுடன் ஒப்பிட்டு, இந்த அல் குர்ஆன் விஷயத்தில் அரசாங்கம் மெத்தனம் காட்டுவதாக சில தரப்பினர் பேசி வருவது குறித்து பிரதமர் கருத்துரைத்தார்.
சம்பந்தப்பட்ட மாணவர் கைதாகி விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



