
கோலாலம்பூர், அக்-16 —தொழிலாளர்களின் கல்வித் தகுதி மற்றும் திறன் நிலைக்கு ஏற்ப நியாயமான சம்பளம் வழங்கும் நோக்கில், ‘மாஸ்கோ’ அடிப்படையிலான ஆரம்பச் சம்பள வழிகாட்டுதல்களை மனிதவள அமைச்சு தயாரித்து வருவதாக அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டுக்கான மடானி வரவு செலவுத் திட்டத்தில், குறைந்தபட்ச மாதச் சம்பளத்தை 1,700 ரிங்கிட்டிலிருந்து 2,000 ரிங்கிட்டாக உயர்த்துவதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். 2027 ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் இந்த உயர்வு, நான்கு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் என்று ரமணன் கூறினார்.
ஆண்டுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டிற்கும் குறைவான விற்பனையைக் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்தக் குறைந்தபட்ச ஊதிய உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய சம்பளச் செலவுகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்ள அவகாசம் வழங்குவதே இதன் நோக்கம் என்றார்.
இதற்கிடையில், பட்டதாரிகளுக்கும் பகுதியளவு திறன் பெற்ற தொழிலாளர்களுக்கும் மாதம் 2,500 ரிங்கிட் ஆரம்ப அடிப்படைச் சம்பளக் கட்டமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ‘மாஸ்கோ’ அடிப்படையிலான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படுகின்றன.
முதற்கட்டமாக, மலேசியத் திறன் சான்றிதழ் நிலை 3 முதல் பட்டப்படிப்பு வரையிலான தகுதிகளைக் கொண்ட ‘மாஸ்கோ’ 1 முதல் 3 வரையிலான வேலைப் பிரிவுகளுக்கான வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்படும். பின்னர், எஸ்.கே.எம். நிலை 1 மற்றும் 2 சான்றிதழ் பெற்றவர்களையும் உள்ளடக்கி, ‘மாஸ்கோ’ 1 முதல் 8 வரையிலான வேலைப் பிரிவுகளுக்கு இதை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆரம்பச் சம்பள விகிதங்கள் மலேசியப் புள்ளிவிவரத் துறையின் அண்மைய தரவுகளின் அடிப்படையில் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, ‘இ-மாஸ்கோ’ இணையத் தளத்தில் பதிவேற்றப்படும். புதிய குறைந்தபட்ச ஊதிய ஆணையுடன் இணைந்து, 2027 ஜூன் மாதத்தில் இவை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
பட்டதாரிகளுக்கான குறைந்தபட்சச் சம்பளத்தை எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாகக் கட்டாயமாக்கும் வகையில், தேசிய ஊதிய ஆலோசனைக் குழுச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமதமைச்சில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் பேசிய ரமணன், தெளிவான, நியாயமான ஊதியக் கட்டமைப்பை உருவாக்குவது சம்பளம் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்றார்.



