சுங்கை பூலோ, அக்டோபர்-26,குறைந்தபட்ச சம்பள விவகாரத்தில் அரசாங்கத்தின் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்.
நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே பிரதமர் அந்த 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளத்தை அறிவித்திருப்பதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆசியாவின் மிகச் சிறந்த நிதியமைச்சராக பெயர் பதித்தவரான டத்தோ ஸ்ரீ அன்வார், அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டே அம்முடிவை எடுத்துள்ளதால், அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
1,500 ரிங்கிட்டிலிருந்து 1,700 ரிங்கிட்டாக குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்பட்டிருப்பதை தங்களால் சமாளிக்க இயலாது என SME எனப்படும் சிறு நடுத்தர தொழில்துறையினர் கவலைத் தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது துணையமைச்சர் அவ்வாறு சொன்னார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ரமணன் முன்னதாக சுங்கை பூலோவில் 5-வது முறையாக மடானி மலிவு விற்பனை நிகழ்வைத் தொடக்கி வைத்தார்.
தீபாவளியை ஒட்டி நேற்று தொடங்கி Dewan Kenaga மண்டபத்தில் நடைபெறும் இந்த 3 நாள் விற்பனையில் 20% கழிவுச் சலுகையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
நிகழ்ச்சியின் தொடக்க விழாவை ஒட்டி இன்று மட்டும் 50% வரையில் சிறப்புக் கழிவு வழங்கப்பட்டது.
குறிப்பாக தீபாவளிக்குத் தயாராகி வரும் சுங்கை பூலோ சுற்று வட்டார இந்துக்கள், கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, சமையல் எண்ணெய், சீனி, மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்த மலிவு விற்பனையின் வாங்கி பயன்பெறுமாறு டத்தோ ஸ்ரீ ரமணன் கேட்டுக் கொண்டார்.