
குவாந்தான், செப்-02-பஹாங், குவாந்தானில் Jalan Mahkotaவில் நிகழ்ந்த தீ விபத்தொன்றில் துணிக்கடை உட்பட போர் காலத்திற்கு முந்தைய நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இரு கடைத் தொகுதிகளின் மேல் தளங்கள் அழிந்தன.
தீ குறித்து நேற்றிரவு 11.33 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, குவாந்தான் Indera Mahkota, Gebeng, Taman Tas, Peramu நிலையங்களைச் சேர்ந்த 33 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் Datuk Mohd Razam Taja Rahim தெரிவித்தார்.
அவர்கள் அங்கு சென்றடைந்த போது துணிக்கடையொன்றின் மேல் தளத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அத்தீ அருகிலிருந்த கட்டிடத்தின் மேல் தளத்திற்கும் பரவியிருந்தது. அத்துணிக்கடையின் மேல் தளத்திலிருந்தே தீ முதலில் பரவத் தொடங்கியதாகவும், தரைத்தளத்தில் குறிப்பிடத்தக்க சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார்.
தீ மீண்டும் பற்றிக் கொள்வதைத் தடுக்கவும் தணல் அணைப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தீக்கான காரணம் மற்றும் மொத்த இழப்பு இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.
இவ்வேளையில், குவாந்தானில் உள்ள தமது இரு கடைகளுக்கான சரக்குகளைச் சேமித்து வைத்து விநியோகித்து வந்த முக்கிய மையமாக அக்கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்காகப் புதிய சரக்குகள் பெருமளவில் அங்கு வைக்கப்பட்டிருந்ததாகவும் துணிக்கடை உரிமையாளரான Norhan Mohd Nor வருத்தத்துடன் தெரிவித்தார்.



