
கூச்சிங், அக்-21-சரவாக், கூச்சிங்கில் உள்ள அனைத்துலகப் பள்ளி ஒன்றில், 16 வயது மாணவர் வைத்திருந்த கூர்மையான பொருளைப் பறிக்க முயன்ற ஆசிரியர் ஒருவர் காயமடைந்தார். அச்சம்பவம் இன்று காலை புதன்கிழமை காலை TK4 பகுதியில் நிகழ்ந்தது.
காயமடைந்த ஆசிரியர், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பவத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்ட மாணவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பள்ளி முதல்வர் அலுவலகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
அச்சம்பவத்தில் வேறு யாரும் காயமடையவில்லை. அச்சம்பவம் குறித்து அம்மாணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில், உடனடியாக பள்ளிக்குச் சென்ற காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மாணவரின் பையைச் சோதனையிட்டபோது, ஆய்வு செய்ய வேண்டிய வேறொரு பொருள் கண்டெடுக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், காவல்துறையின் அறிவுறுத்தலின்படியும் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முன்கூட்டியே அழைத்துச் செல்லுமாறும், உடனடியாக வர முடியாதவர்கள் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



