
ஜித்ரா, ஆகஸ்ட்-05- கெடா, Bukit Kayu Hitamமில் உள்ள Taman Bayanmasசில் ஒரே குடும்பமொன்றைச் சேர்ந்த மூவர் காணாமல் போயிருப்பதற்கு கூட்டுக் கட்டுவதில் ஏற்பட்ட கடன் சிக்கல்கள் காரணமாக இருந்திருக்கலாம் என காவல் துறை சந்தேகிக்கிறது.
கூட்டுக் கட்டும் சேமிப்புத் திட்டத்தில் தொடர்புடையவர் என நம்பப்படும் நபரிடம் இருந்து, மாயமாகியிருக்கும் மூவரில் ஒருவரான ஆடவரின் மனைவிக்கு எதிராகக் புகாரொன்று பெறப்பட்டுள்ளதாகத் Kubang Pasu மாவட்ட காவல் துறைத் தலைவர் Mohd Radzi Abdul Rahim தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பெண், அவரது கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே வேளை அக்குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியதற்கான எந்தப் பதிவும் இல்லை.
அவர்கள் ஏதேனும் குற்றச் செயலுக்கு ஆளாகியிருக்கலாம் அல்லது விபத்தில் சிக்கியிருக்கலாம் என்பது உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாரேனும் அக்குடும்பத்தினரைப் பார்த்திருந்தால், அது குறித்து தகவல் கொடுக்குமாறு Mohd Radzi பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஜூலை 20 ஆம் தேதி தங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய அக்குடும்பத்தினர் காணாமல் போனதாகவும், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
காணாமல் போன பெண்ணின் 62 வயதுடைய தந்தை அதன் தொடர்பில் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



